மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்போன் கடை உரிமையாளர் உள்பட 4 பேரிடம் ரூ.8½ லட்சம் மோசடி; 3 பேருக்கு வலைவீச்சு


மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்போன் கடை உரிமையாளர் உள்பட 4 பேரிடம் ரூ.8½ லட்சம் மோசடி; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Sep 2019 10:15 PM GMT (Updated: 23 Sep 2019 6:30 PM GMT)

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்போன் கடை உரிமையாளர் உள்பட 4 பேரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த சிவன்மலை என்பவரின் மகன் கோடீஸ்வரன் (வயது 25). எம்.பி.ஏ. முடித்து உள்ள இவர் சத்தியமங்கலத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கோடீஸ்வரனின் நண்பர்கள் பிரகாஷ், சதீஸ்குமார், தினேஷ்குமார். இவர்கள் அனைவரும் முதுநிலை பட்டதாரிகள் ஆவர். இதேபோல் டி.என்.பாளையத்தை அடுத்த குள்ளநாயக்கனூரை சேர்ந்தவர்கள் முத்துசாமி, பரமேஸ்வரன், அவருடைய தம்பி தீபக் பிரபு. இவர்கள் 3 பேரும் மலேசிய நாட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோடீஸ்வரன், பிரகாஷ், சதீஸ்குமார், தினேஷ்குமார் ஆகியோருக்கும், முத்துசாமி, பரமேஸ்வரன், தீபக் பிரபு ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது முத்துசாமி, பரமேஸ்வரன், தீபக் பிரபு ஆகியோர் கோடீஸ்வரன் மற்றும் அவருடைய நண்பர்களிடம், ‘தாங்கள் மலேசிய நாட்டில் வேலை செய்து வருகிறோம். மலேசிய நாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இருந்தால் தங்களிடம் கூறுங்கள்,’ என தெரிவித்தனர்.

இதில் ஆர்வ மிகுதியால் கோடீஸ்வரன் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் தாங்கள் மலேசிய நாட்டில் வேலை செய்ய வருகிறோம் என கூறினர். மேலும் வேலைக்காக ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்தை முத்துசாமி, பரமேஸ்வரன், தீபக் பிரபு ஆகியோரிடம் கொடுத்தனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட 3 பேரும், கோடீஸ்வரன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு மலேசிய நாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. அப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளோம் என்பதை உணர்ந்த கோடீஸ்வரன் மற்றும் அவருடைய நண்பர்கள், உடனே தங்களுடைய பணத்தை திருப்பி தரும்படி முத்துசாமி, பரமேஸ்வரன், தீபக் பிரபு ஆகியோரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் கடந்த 1 ஆண்டாக ஏமாற்றி வந்தனர்.

இதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசில் கோடீஸ்வரன் மற்றும் அவருடைய நண்பர்கள் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முத்துசாமி, பரமேஸ்வரன், தீபக் பிரபு ஆகியோர் எங்களிடம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மோசடியாக பெற்று எங்களை ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தரவேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துசாமி, பரமேஸ்வரன், தீபக் பிரபு ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story