கொள்ளையரிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணம்; உரியவர்களிடம் ஒப்படைப்பு


கொள்ளையரிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணம்; உரியவர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 6:42 PM GMT)

காரைக்குடியில் கொள்ளைபோன நகைகள், பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் வசிப்பவர் ஸ்டீபன் தனபால். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு தேவாலயத்துக்கு சென்று இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது வீட்டை உடைத்து உள்ளே புகுந்து 18 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்று விட்டனர்.

இதேபோல காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வசிக்கும் லீலா என்பவரது வீட்டிலும் நகைகள் கொள்ளைபோனது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அரியலூரை சேர்ந்த வைத்தியநாதன், திருச்சியை சேர்ந்த புகழேந்தி, முத்துக்குமார், கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரியவந்தது.

அவர்கள் வேறொரு வழக்கில் திண்டுக்கல் போலீசாரிடம் சிக்கியிருந்தனர். காரைக்குடி போலீசார் அவர்களை தங்களது காவலுக்கு எடுத்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து 21 பவுன் நகைகளை கைப்பற்றினர்.

இதே போன்று காரைக்குடி கல்லூரி சாலையில் ராஜா முகமது என்பவரது அரிசி கடையில் இரவில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் செல்போன் திருடப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வந்தது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஜய் மாலிக் கணேஷ், மாலிக் சோஹைல், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் ஜெயின் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த கும்பலை வேறொரு வழக்கில் தேவகோட்டை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களையும் காரைக்குடி போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்தையும் செல்போனையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட நகைகளையும், பணத்தையும் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.

Next Story