சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு


சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:00 AM IST (Updated: 24 Sept 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

சிவகங்கை,

சென்னை தண்டயார்பேட்டையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா. இவர் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு 100 மாணவ-மாணவிகள் முதலாமாண்டில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 15 பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களின் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் குழந்தைவேல் தலைமையில், துணை முதல்வர் விசாலாட்சி, கண்காணிப்பாளர் ஷீலா மற்றும் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் சரிபார்த்தனர். அதில் பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டன.

நேற்று 60 மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. மீதமுள்ள 40 பேரின் சான்றிதழ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சரிபார்க்கப்படுவதாகவும், இதுவரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பணியில் எவ்வித முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் கூறினார்.

Next Story