மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதை கண்டித்து தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டம்


மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதை கண்டித்து தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 8:05 PM GMT)

ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டுவதை கண்டித்து தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் நேற்று காலை பத்துக்கண்ணு சந்திப்பு பகுதியில் பஸ்களை நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வில்லியனூர்,

புதுச்சேரியில் இருந்து திருக்கனூருக்கும், திருக்கனூரில் இருந்து பத்துக்கண்ணு சந்திப்பு மற்றும் ஊசுட்டேரி வழியாக புதுச்சேரிக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்துக்கண்ணு பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற ஒரு தனியார் பஸ்சில் ரவுடிகள் சிலர் மாமூல் கேட்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியுள்ளனர்.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதியில் இதேபோல் மாமூல்கேட்டு டிரைவர், கண்டக்டரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசில் தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்றுக்காலை 8.30 மணி அளவில் திருக்கனூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு சந்திப்பில் பஸ்களை நிறுத்தி திடீரென போராட்டத்தில் குதித்தனர். அதனால் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள், பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சேரி மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வேல், சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போலீஸ் நிலையத்தில் முறையாக புகார் அளித்தால் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உறுதி அளித்தார். அதன்பேரில் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை வழக்கம்போல் இயக்கத் தொடங்கினார்கள். இந்த திடீர் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் காலை நேரத்தில் கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வேலைக்கு சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

Next Story