நாகர்கோவிலில் ஆட்டோவில் கஞ்சா கடத்தல் டிரைவர் கைது


நாகர்கோவிலில் ஆட்டோவில் கஞ்சா கடத்தல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2019 3:45 AM IST (Updated: 24 Sept 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஆட்டோவில் 2 கிலோ கஞ்சாவை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முக்கியமாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்தே கஞ்சா விற்பனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோட்டார் போலீசார் நேற்று முன்தினம் ஒழுகினசேரி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் மறித்தனர். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஓட்டுப்புறை தெருவை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் (வயது 33) என்பது தெரியவந்தது.

கைது

மேலும் ஆட்டோவை போலீசார் சோதனை செய்ததில், ஒரு பையில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அலெக்ஸ் ஆட்டோவில் கடத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அலெக்சை போலீசார் கைது செய்தனர். கஞ்சாவுடன் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் கஞ்சாவை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story