சிதம்பரம் ஓமகுளத்தில் ஆக்கிரமிப்பு: மேலும் 12 வீடுகள் இடித்து அகற்றம் - ஆலத்தூரில் 15 ஏக்கர் ஏரி நிலமும் மீட்கப்பட்டது


சிதம்பரம் ஓமகுளத்தில் ஆக்கிரமிப்பு: மேலும் 12 வீடுகள் இடித்து அகற்றம் - ஆலத்தூரில் 15 ஏக்கர் ஏரி நிலமும் மீட்கப்பட்டது
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் ஓமகுளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேலும் 12 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. ஆலத்தூரில் 15 ஏக்கர் ஏரி நிலமும் மீட்கப்பட்டது.

சிதம்பரம், 

சிதம்பரம் ஓமகுளத்தை ஆக்கிரமித்து 84 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்களிடம் முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தை விட்டு காலி செய்யவில்லை. எனவே கடந்த 16-ந் தேதி 72 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து நேற்று மீதமுள்ள வீடுகளையும் அகற்றும் பணி நடைபெற் றது. இதற்காக சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், நகராட்சி பொறியாளர் மகாதேவன், மின் கண்காணிப்பாளர் சலீம், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அங்கு.பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து 12 வீடுகளை இடித்து அகற்றினர்.

இதேபோல் ராமநத்தம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

ஆலத்தூரில் 80 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் 15 ஏக்கரை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலத்தில் அந்த ஏரியில் கூடுதல் நீரை சேமித்து வைக்க முடியவில்லை. இது குறித்து கிராம மக்களும், விவசாயிகளும் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், திட்டக்குடி மண்டல துணை தாசில்தார் எழில்வளவன், ராமநத்தம் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று காலை அந்த ஏரிக்கு சென்றனர். அங்கு ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட 15 ஏக்கர் நிலமும் மீட்கப்பட்டது. இதில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story