27-ந் தேதி நடைபெற இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் திடீர் மாற்றம்


27-ந் தேதி நடைபெற இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:45 AM IST (Updated: 24 Sept 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 27-ந் தேதி நடைபெற இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற 1-ந் தேதி நடக்க உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகே உள்ளார். துணை மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பத்ரேகவுடா இருக்கிறார். இவர்களின் பதவிக்காலம் வருகிற 28-ந் தேதி முடிவடைகிறது. இதனால் வருகிற 27-ந் தேதி மேயர் மற்றும் துணைமேயர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கே.ஆர்.புரம், மகாலட்சுமி லே-அவுட், யஷ்வந்தபுரம், சிவாஜிநகர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்தமாதம்(அக்டோபர்) 21-ந் தேதி நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம். இதை காரணமாக கொண்டு பெங்களூரு மாநகராட்சி ஆளும்கட்சியான காங்கிரஸ் மாநகராட்சி கமிஷனர் அனில் குமாரிடம் கடிதம் கொடுத்தனர்.

அந்த கடிதத்தில், ‘பெங்களூரு நகரில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் தீர்ப்பு வழங்கும் நிலை உள்ளது. இதற்கிடையே 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மேயர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் நிலையற்ற தன்மை உள்ளது. எனவே, மேயர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்‘ என்பன போன்ற அம்சங்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தன.

இதுபற்றி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் பெங்களூரு மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அனில் குமார் கூறினார். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மண்டல கமிஷனர் ஹர்ஷகுப்தா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மேயர், துணைமேயர் தேர்தல் அடுத்தமாதம்(அக்டோபர்) 1-ந் தேதி மாநகராட்சி அரங்கில் காலை 11.30 மணிக்கு நடக்க உள்ளது. அன்றைய தினம் 12 நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடக்கிறது‘ என்றார்.

பெங்களூரு மாநகராட்சியில் ஆண்டுக்கு ஒருமுறை மேயர் தேர்தல் நடைபெறும். கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து மாநகராட்சியை கைப்பற்றின. தற்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவை பெற்று மேயர், துணைமேயர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்து உள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் வரிந்து கட்டி நிற்கின்றன. இதனால் மாநகராட்சி மேயர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story