சென்னிமலையில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


சென்னிமலையில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 10:45 PM GMT (Updated: 24 Sep 2019 1:35 PM GMT)

சென்னிமலையில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னிமலை,

சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சென்னிமலை பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாரத்துக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாளடைவில் வாரம் ஒரு முறை என மாறியது. இதையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை என மாறி பின்னர் 20 நாட்களுக்கு மேல் ஆனாலும் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படாமல் இருந்து வந்தது உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி சென்னிமலை பேரூராட்சி நிர்வாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9 மணியளவில் தி.மு.கவினர் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அறிந்ததும் பேரூராட்சி செயல் அதிகாரி கிருஷ்ணன் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரிடம் பொதுமக்கள், ‘காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. ஆனால் கடந்த 25 நாட்களுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ரூ.50–ஆக இருந்த குடிநீர் கட்டணம் 3 மடங்கு உயர்த்தி ரூ.150–ஆக வசூல் செய்யப்படுகிறது. எனினும் எங்களுக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதற்கான காரணம் என்ன?,’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல முடியாமல் செயல் அதிகாரி கிருஷ்ணன் திணறினார்.

இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று திரண்டு 10 மணி அளவில் சென்னிமலை– காங்கேயம் ரோட்டில் காலிக்குடங்களுடன் உட்கார்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் லலிதா, சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் செயல் அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு தினமும் 23 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். அதற்கான பணமும் நாங்கள் செலுத்தி வருகிறோம். ஆனால் கடந்த 3 மாதங்களில் சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் எங்களுக்கு தெரிய வேண்டும்.

 சமீபத்தில் இங்குள்ள வாரச்சந்தைக்குள் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் இரவு நேரத்தில் தண்ணீர் நிரம்பி விடிய, விடிய ரோட்டில் ஆறாக ஓடியது. இதை பொதுமக்கள் பார்த்து பேரூராட்சியில் தெரிவித்த பிறகே தண்ணீரை அடைக்கப்பட்டது. இதேபோல் ஈங்கூர் ரோட்டில் கருப்பணன் கோவில் பள்ளம் என்ற இடத்தில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. ஆனால் அதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பல நாட்களுக்கு பிறகு குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இது போன்ற காரணங்களால் எங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னிமலை பேரூராட்சிக்கு கடந்த 3 மாதங்களில் எத்தனை லட்சம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது என்ற விவரங்கள் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்டும்,’ என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மதியம் 12.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக சென்னிமலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story