வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்; கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது


வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்; கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 25 Sept 2019 3:45 AM IST (Updated: 24 Sept 2019 8:00 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:–

தமிழக அரசு வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயல், கனமழை, வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேரிடர் தொடர்பான அனைத்து பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 15 மண்டல அளவில் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் குழுக்களும், இதர துறை அலுவலர்கள் கொண்ட 135 குழுக்களும், 429 ஊராட்சிகளில் 5,000–க்கும் மேற்பட்ட முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு முதல்நிலை மீட்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான குழு அலுவலர்கள் அனைவரும் தங்களது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அந்த மையங்களின் நிலை குறித்து உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களிலும் வடகிழக்கு பருமழை பணிகளை கண்காணிக்க 9 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அவசர கால சூழ்நிலையினை கருத்தில் கொண்டு போதிய அளவு உணவு தானியங்கள் கையிருப்பு வைத்திட கூட்டுறவு, மாவட்ட வழங்கல் மற்றும் பொது வினியோகத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர அவசர கால சூழ்நிலையினை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான போதிய அளவு மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திடவும் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலை ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் அதனை உடனடியாக சீர்செய்திட தேவையான நவீன உபகரணங்களை தயார் நிலையில் வைத்திட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 16 மழை அளவு கணக்கீட்டு நிலையங்களின் மூலம் தினந்தோறும் மழை அளவு கணக்கீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில் மாவட்டத்தில் உள்ள கண்மாய், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் இருப்பு அளவை கண்காணித்திடவும், நீர்வழித்தடங்களில் தடையில்லாமல் பராமரித்திடவும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் கரை உடைப்பு ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் அவற்றை சரிசெய்ய ஏதுவாக போதிய அளவு மணல் மூடைகளை இருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கோட்டாட்சியர்கள் ராமன்(பரமக்குடி), கோபு(ராமநாதபுரம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஆரோக்கியராஜ், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் சாமிராஜ் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story