உளுந்தூர்பேட்டை அருகே, டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


உளுந்தூர்பேட்டை அருகே, டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Sep 2019 10:30 PM GMT (Updated: 24 Sep 2019 4:51 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் தேவேந்திரன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் தேவேந்திரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கும், விற்பனையாளர் தேவேந்திரனுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவேந்திரன் பதறியடித்துக் கொண்டு கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை காணவில்லை. இதற்கிடையே அங்கு வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, ஜெயச்சந்திரன், குமரகுருபரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டாஸ்மாக் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு தேவேந்திரன் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த 500-க்கும் அதிகமான மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது. திருடுபோன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story