அனுமதியின்றி வெடிபொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
அனுமதியின்றி வெடிபொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தொகுதியில் உள்ள விக்கிரவாண்டி, பனப்பாக்கம், ஆவுடையார்பட்டு, வி.மாங்குப்பம், கஞ்சனூர், காணை, அன்னியூர் உள்ளிட்ட 12 வெடிமருந்து கிடங்குகளை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது அனுமதி பெற்று வெடிமருந்து கிடங்கு இயங்குகிறதா? பாதுகாப்பான முறையில் வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகிறதா? எவ்வளவு பொருட்கள் இருப்பு உள்ளது என்பதை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதியில் உள்ள 12 வெடிமருந்து கிடங்குகளான பட்டாசு தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனை செய்யும் இடங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்கள் எவ்வளவு வெடிபொருட்களை இருப்பு வைத்துள்ளார்கள், சரியான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தோம்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் இந்த இடைப்பட்ட காலத்தில் வெடிமருந்துகளோ, பட்டாசுகளையோ யாருக்காவது விற்பனை செய்தால் அவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
காவல் துறைக்கு தெரியாமல் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. யாராவது கேட்டால் காவல் துறை அனுமதி பெற்று விற்பனை செய்ய வேண்டும் என கிடங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு அனுமதியின்றி வெடிபொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் மருது, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேல், ஏட்டு சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story