ஓடும் ரெயிலில் தவறவிட்ட 21 பவுன் நகை, பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்


ஓடும் ரெயிலில் தவறவிட்ட 21 பவுன் நகை, பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
x
தினத்தந்தி 25 Sept 2019 4:45 AM IST (Updated: 24 Sept 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் தவறவிட்ட 21 பவுன் நகை, பணத்தை உரியவர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

மானாமதுரை,

தேவகோட்டையை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 30). இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றிருந்தார். அங்கு வேலை முடிந்ததும், அங்கிருந்து தேவகோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று வந்தார். அப்போது அவர் ஒரு பையில் 21 பவுன் நகை, ரூ.33 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து எடுத்து வந்தார்.

ரெயில் தேவகோட்டை வந்ததும், அதிலிருந்து புவனேஸ்வரி இறங்கி வந்துவிட்டார். சிறிது தூரம் சென்றதும் தான் கொண்டு வந்த பையை காணாததால், அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் தேவகோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து, அங்குள்ள உயர் அதிகாரியிடம் தான் தவறவிட்ட பை குறித்து கூறினார்.

அதைத்தொடர்ந்து அதிகாரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரெயில் செல்லும் இடத்தை அறிந்ததும், மானாமதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில், புவனேஸ்வரி சொன்ன இடத்தில் தேடினர்.

அங்கு நகை மற்றும் பணம் வைத்திருந்த பை பத்திரமாக இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் தகவல் கூறி, புவனேஸ்வரியை வரவழைத்தனர். அங்கு சென்ற அவர் தனது பொருட்கள் பற்றி சரியான தகவல் கூறியதும், அதை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர்.

Next Story