கோவையில், தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை - வடமாநில வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் தங்க-வைர நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இடிகரை,
கோவை சாய்பாபாகாலனி பாரதி பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா குப்தா (வயது 39), தொழில் அதிபர். இவருடைய மனைவி நிதி குப்தா (37). இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
ஆதித்யா குப்தாவுக்கு கோவை மற்றும் குஜராத் உள்பட பல இடங்களில் மில்கள் உள்ளன. அத்துடன் அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அவர் தனது மில்களை பார்வையிடுவதற்காக அவ்வப்போது தனது மனைவியுடன் வெளியூர் செல்வது வழக்கம். அதன்படி ஆதித்யா குப்தா தனது மனைவியுடன் கடந்த 18-ந் தேதி குஜராத் சென்றார். வீட்டில் அவருடைய 2 மகன்கள் மற்றும் அங்கு வேலை செய்து வரும் 8 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நிதி குப்தாவுக்கு, வீட்டின் அருகில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு வீட்டில் இரவில் நீண்ட நேரமாக காலிங் பெல் அடிப்பதாக கூறினார்கள். உடனே அவர் தனது மகன்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டார். அவர்கள் ஒன்றும் இல்லை என்று கூறினார்கள். எனினும் அவர் தனது மேலாளரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று விசாரிக்கும்படி கூறினார். அவரும் அங்கு சென்று விசாரித்துவிட்டு எதுவும் நடக்கவில்லை என்று கூறிவிட்டார்.
இதையடுத்து கடந்த 21-ந் தேதி வீடு திரும்பிய கணவன்-மனைவியும் தனது மகன்களிடம் இரவில் காலிங் பெல் அடித்தது குறித்து கேட்டனர். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள்.
அதனைத்தொடர்ந்து வீட்டில்வேலை செய்து வருபவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது வீட்டில் வேலை செய்த 8 பேரில், 6 பேர் மட்டுமே இருந்தனர். மற்ற 2 பேர் குறித்து கேட்டபோது அவர்கள் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஆதித்யா குப்தா, தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு உள்ள பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதற்குள் இருந்த தங்க- வைர நகைகள், தங்க கைக்கடிகாரம், ரூ.2½ லட்சம் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சாய்பாபாகாலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.
அத்துடன் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதுபோன்று கைவிரல் ரேகை நிபுணர்களும் அங்கு வந்து பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
ஆதித்யா குப்தா வீட்டில் வேலை செய்து வரும் 8 பேரில் 2 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சுமார் 30 வயது இருக்கும். கடந்த 18-ந் தேதிக்கு பின்னர் அவர்கள் 2 பேரும் மாயமாகிவிட்டனர். அந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அதில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்யும் கருவியும் திருடப்பட்டு உள்ளது.
ஆதித்யா குப்தா வெளியூர் சென்ற பின்னர் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் இருவரும்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். தலைமறைவாகி விட்ட அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் குறித்த சில தகவல்களும் கிடைத்து உள்ளன. எனவே விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story