தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கேரள படகுகளை நிறுத்தக்கூடாது மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை


தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கேரள படகுகளை நிறுத்தக்கூடாது மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கேரள பதிவு எண் கொண்ட படகுகளை நிறுத்தக்கூடாது என்று மீனவர் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

நாகர்கோவில்,

தேங்காப்பட்டணம் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு இரையுமன்துறை, இனயம்புத்தன்துறை, இனயம், ஹெலன்காலனி, மேல் மிடாலம், கீழ் மிடாலம் உள்பட 15 கிராம மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கேரள பதிவு எண் கொண்ட படகுகளை கொண்டு மீன்பிடிப்பதாகவும், அவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் அளித்தனர்.

ஆலோசனை கூட்டம்

இதைத் தொடர்ந்து தேங்காப்பட்டணம் மீனவ பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று நடந்தது. மீன்வளத்துறை உதவி இயக்குனர் (குளச்சல்) கோபிநாத் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (கடல்வளம்) லேமக் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று மீனவ பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளை கேட்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது மீனவ பிரதிநிதிகள் கூறியதாவது:-

தேங்காப்பட்டணம் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கிறார்கள். துறைமுகத்தின் முகத்துவாரம் 250 மீட்டர் நீளம் இருக்க வேண்டும். ஆனால் முகத்துவாரத்தில் மணல் சேர்ந்துவிட்டதால் நீளம் குறைந்திருக்கிறது. மேலும் மணல் திட்டு காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு படகுகள் சேதம் அடைகின்றன. எனவே மணல் திட்டை அகற்றுவதோடு முகத்துவாரத்தின் நீளத்தை 250 மீட்டராக நீட்டிக்க வேண்டும்.

நடவடிக்கை

துறைமுகத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் மீன் வாங்க வருபவர்கள் தங்களது வாகனத்தை மீன் விற்பனை செய்யும் கூடத்தையொட்டி நிறுத்துகிறார்கள். இதனால் இடநெருக்கடி ஏற்படுகிறது. மேலும் துறைமுகத்தில் படகுகள் நிறுத்தவும் இடமில்லை. எனவே துறைமுகத்தில் படகுகள் மற்றும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும். இடநெருக்கடி இருக்கும் நிலையில் சிலர் எந்தவொரு அனுமதியும் பெறாமல் கேரள பதிவு எண் கொண்ட படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்கள். மேலும் அவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் சிறு சிறு மீன்களும் வலையில் சிக்குகின்றன. இதன் மூலம் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகத்தில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

படகுகள் நிறுத்த இடவசதி இல்லாதது பற்றி அனைத்து மீனவ பிரதிநிதிகளும் ஒன்றாக எழுந்து நின்று வலியுறுத்தியதால் கூட்டத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அமர வைத்தனர்.

அதிகாரிகள் பதில்

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் இரட்டைமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை உத்தரவு அனைத்து மீனவர்களுக்கும் பொருந்தும். எனவே இரட்டைமடி வலையை பயன்படுத்த கூடாது. மீறியும் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் படகுகள் நிறுத்த ஏற்கனவே நெருக்கடி நிலை உள்ளது. எனவே கேரள பதிவு எண் கொண்ட படகுகளை துறைமுகத்தில் நிறுத்த கூடாது. முகத்துவாரத்தில் சேர்ந்துள்ள மணல் திட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் அரசிடம் அனுமதி வாங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். 

Next Story