குடிமராமத்து திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள்; குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு


குடிமராமத்து திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள்; குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மதுரை,

மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ராஜசேகர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர். 2017-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. மதுரையில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரியாறு-வைகை அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இன்னும் தண்ணீர் திறக்கப்பட வில்லை. இதனால் மதுரை மாவட்டம் ஒரு போக பாசன பகுதியாக மாறி வருகிறது. எனவே மேலூர் வரை பாசனத்திற்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

உடனே கலெக்டர் குறுக்கிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

உசிலம்பட்டி விவசாயிகள் கூறும் போது, உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் மூலம் 33 கண்மாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர். மேலும் தேனூர், சமயநல்லூர், தோடனேரி ஆகிய பகுதிகளுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல திருவேடகம் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. அது இடிந்து விட்டதால் தண்ணீர் அந்த பகுதிக்கு வரவில்லை. எனவே அந்த தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்து உள்ளது என்று குற்றம் சாட்டினர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. மாடக்குளம் கண்மாயில் ரூ.85 லட்சம் மதிப்பில் குடி மராமத்து பணிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். ஆனால் அங்கு 4 பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் குடிமராமத்து பணிகள் நடக்கிறது. மேலும் அங்கு எல்லைக்கல் ஊன்றாமல் பெயரளவுக்கு தான் பணிகள் நடைபெறுகிறது. இதே போன்று தான் அனைத்து கண்மாய்களிலும் பணிகள் நடைபெறுகிறது.

மேலும் இந்த திட்டத்தில் மூலம் பணம் முறைகேடாக எடுக்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, மதுரை மாவட்டத்தில் 135 கண்மாய்களில் குடி மராமத்து பணிகள் நடக்கிறது. இங்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தான் பணிகள் நடைபெறுகிறது என்றனர். அதற்கு விவசாயிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். உடனே கலெக்டர் குறுக்கிட்டு கண்மாய்களின் எல்லைகளை அளந்து அளவு கல் ஊன்றி அதன் பின்னர் தான் குடிமராமத்து பணி நடக்க வேண்டும். கண்டிப்பாக அங்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேஷ் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story