வெண்ணந்தூர் அருகே கனமழையால் தரைப்பாலம் உடைந்தது 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


வெண்ணந்தூர் அருகே கனமழையால் தரைப்பாலம் உடைந்தது 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 10:45 PM GMT (Updated: 24 Sep 2019 8:28 PM GMT)

கனமழை காரணமாக வெண்ணந்தூர் அருகே தரைப்பாலம் உடைந்தது. இதனால் 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் அடுத்த மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு பாய்ந்து ஓடுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வழியாக பாய்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

நேற்று முன்தினம் சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மதியம்பட்டி - சவுரிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

தரைப்பாலம் உடைந்தது

இந்நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால் மதியம்பட்டி - சவுரிபாளையம் இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலமானது உடைந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த பகுதியில் ரசாயனம் கலந்த நுரையுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதியம்பட்டி, சவுரிபாளையம், கல்கட்டானூர், பொரசல்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அதிகாரிகள் இதை உடனடியாக கவனத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story