பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் சத்தம், பழுது காரணமாக பெட்டி கழற்றிவிடப்பட்டது
பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென சத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பழுது காரணமாக ஒரு பெட்டி கழற்றி விடப்பட்டது.
ஜோலார்பேட்டை,
சத்தீஷ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி செல்லும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை 8.10 மணி அளவில் பிலாஸ்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மதியம் 12.40 மணிக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் 4-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது ரெயில் சக்கரத்தில் அதிக சத்தம் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து என்ஜின் டிரைவர் சத்தம் வந்த பெட்டி பகுதியில் சென்று பார்த்தபோது, ரெயில் என்ஜினில் இருந்து 7-வது பெட்டியான எஸ்.9 ரெயில் பெட்டியின் அடியில் இயங்கும் ‘ஆக்சல் பாக்ஸ்’ உடைந்து இருப்பதும், இதனால் ரெயில் சக்கரத்தில் அதிக சத்தம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் அங்கு சென்று அந்த பெட்டியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சீரமைக்க முடியாததால், அந்த பெட்டியை மட்டும் கழற்றிவிட்டு, மீதமுள்ள பெட்டியுடன் இணைத்தனர். இந்த பணியின் காரணமாக அந்த ரெயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக மாலை 3.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. அந்த பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் “தினத்தந்தி” நிருபரிடம் கூறியதாவது:-
முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.9 பெட்டியில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டது. இந்த ரெயில் ரேணிகுண்டா ரெயில் நிலையம் வரும் போதே அதிக அளவில் சத்தம் வருவதாக தகவல் தெரிவித்தனர். பின்னர் ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு, எந்த பாதிப்பும் இருக்காது என கூறியதின் பேரில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. ஆனால் பயணிகள் அந்த பெட்டியில் அதிக அதிர்வுகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்க வைத்து, அந்த பெட்டியை ரெயில்வே ஊழியர்கள் சரிசெய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதனால் அந்த பெட்டியை கழற்றிவிட்டு, மீதமுள்ள பெட்டியுடன் இணைத்தோம். இதனால் அந்த ரெயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story