வேலூர் அருகே, கன்டெய்னர் லாரியை கடத்திய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர் அருகே கன்டெய்னர் லாரியை கடத்திய வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கன்டெய்னர் லாரி கடந்த மாதம் 21-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கான உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. துரை என்பவர் லாரியை ஓட்டிச்சென்றார்.
வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டலில் சாப்பிடச்சென்றார். சாப்பிட்டுவிட்டு வந்த போது லாரியை காணவில்லை. மர்மநபர்கள் கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் லாரி உரிமையாளர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்ததால் அதன் மூலம் லாரி எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை வெங்கடேசன் கண்காணித்தார். அப்போது லாரி பள்ளிகொண்டா டோல்கேட் அருகே சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர்.
லாரியை கடத்தி சென்றதாக வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 22), அசோக்குமார் (29), முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (21), விருதம்பட்டை சேர்ந்த அன்பழகன் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதற்கான நகல், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் உள்பட 4 பேருக்கும் வழங்கப் பட்டது.
Related Tags :
Next Story