வேலைக்காக அமெரிக்கா செல்ல ‘விசா’வுக்கு போலி ஆவணங்களை கொடுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது
வேலைக்காக அமெரிக்கா செல்ல விசாவுக்கு போலி ஆவணங்களை கொடுத்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 45). இவர் கோவையில் உள்ள நியூ சித்தாபுதூரில் வெளிநாடுகளில் வேலை வாங்கிக்கொடுக்கும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு சுந்தராபுரத்தை சேர்ந்த நிவிஸ் (27) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிறுவனம் சார்பில் கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்ததுடன், வெளிநாடுகளில் வேலையும் வாங்கி கொடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த கலைமணி (25), சதீஷ்குமார் (24) ஆகியோர் வெளிநாட்டில் வேலை பெற இந்த நிறுவனத்தை அணுகினார்கள். அப்போது அவர்கள் அமெரிக்காவில் வேலை வாங்கிக்கொடுப்பதாக பல லட்சம் ரூபாயை வாங்கி உள்ளனர். மேலும் அவர்களுக்கு விசா பெற தேவையான ஆவணங்களை சேர்த்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த ஆவணங்களை தூதரக அதிகாரிகள் சரிபார்த்தபோது, சில ஆவணங்களை ரஞ்சித்குமார், நிவிஸ் ஆகியோர் சேர்ந்து விசா பெற, அந்த நிறுவனம் தொடர்பான போலி ஆவணங்களை சமர்ப்பித்தது தெரியவந்தது.
இதையடுத்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக உதவி மண்டல பாதுகாப்பு அதிகாரி ஷேன் பிரௌன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணிடம் புகார் செய்தார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க காட்டூர் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக காட்டூர் போலீசார் ரஞ்சித்குமார், நிவிஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் காட்டூரில் நின்றிருந்த நிவிசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ரஞ்சித்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story