வேடசந்தூர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை: வியாபாரி வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்தது; மகளுடன் உயிர் தப்பிய தம்பதி


வேடசந்தூர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை: வியாபாரி வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்தது; மகளுடன் உயிர் தப்பிய தம்பதி
x
தினத்தந்தி 25 Sept 2019 4:15 AM IST (Updated: 25 Sept 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதியில் வியாபாரி வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் மகளுடன் தூங்கி கொண்டிருந்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக வேடசந்தூர் பகுதியில் 128 மி.மீட்டர் மழை பதிவானது.

வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு சொந்தமான பழமையான வீடு உள்ளது. அந்த வீட்டில் யாரும் இல்லை. இதற்கிடையே நள்ளிரவில் பெய்த மழையால் அந்த வீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து அருகே வசிக்கும் பஞ்சு மிட்டாய் வியாபாரி கிருஷ்ணன் வீட்டின் மீது விழுந்தது.

இதில் அந்த வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணன், அவருடைய மனைவி காளியம்மாள், மகள் நிவேதா ஆகியோர் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து தங்கள் வீட்டின் மீது விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நல்லவேளையாக 3 பேருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் அவர்களால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.

இதனால் அவர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டுக்குள் சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் கிருஷ்ணனின் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. மேலும் மோட்டார் சைக்கிள், மிட்டாய் விற்கும் தள்ளுவண்டி, சைக்கிளும் சேதம் அடைந்தது. இதற்கிடையே தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

பலத்த மழை காரணமாக நேருஜிநகரில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வேடசந்தூர் அருகே உள்ள லவுகணம்பட்டி மற்றும் பெருமாள்கவுண்டன்பட்டியிலும் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

Next Story