சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கோவில், ஜவுளிக்கடையில் நகை, பணம் திருட்டு


சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கோவில், ஜவுளிக்கடையில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 Sep 2019 9:42 PM GMT (Updated: 24 Sep 2019 9:42 PM GMT)

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கோவில், ஜவுளிக்கடையில் நகை, பணம் திருட்டு போனது.

சேலம்,

சேலம் பெரிய வீராணம் பகுதியில் சக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் உள்ளார். இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி கும்பிட்டு செல்கிறார்கள். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி அம்மனுக்கு பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவில் நடையை சாத்திவிட்டு சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் முனுசாமி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலி சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த ½ பவுன் நகை ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தையும் திருடி சென்று உள்ளனர். இது குறித்து வீராணம் போலீஸ் நிலையத்திற்கு பூசாரி முனுசாமி தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மெய்யனூரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி வியாபாரத்தை முடித்து கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கோபிநாத் கடையை திறந்தார். அப்போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, அங்கு வைத்திருந்த ரூ.6 ஆயிரம் மற்றும் 5 பட்டு புடவைகள் ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கோபிநாத் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story