மனித கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் சிறை தண்டனை - மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கை


மனித கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் சிறை தண்டனை - மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2019 4:45 AM IST (Updated: 25 Sept 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

மனித கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்கள், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று ஆணையாளர் சதீஷ் தலைமையில் நடந்தது. இதில் ஆணையாளர் சதீஷ் பேசியதாவது:-

மனித கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றும் பணிகளை முற்றிலும் தடுப்பதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தணிக்கைகள் மேற்கொள்ளும் போது தங்கும் விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தப்பட்டால் முதல்முறையாக இருக்கும் பட்சத்தில் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையாக கண்டுபிடிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் இறக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் அம்மாபேட்டை மண்டலம் 40-வது வார்டில் உள்ள பச்சப்பட்டி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீரை கொண்டு வர வேண்டும். அங்கு செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் தொகையினை கழிவுநீர் வாகன அகற்றும் வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். மாறாக கழிவுநீர் ஓடைகள், மழைநீர் வடிகால்களில் கழிவுநீரினை வெளியேற்றினால் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், திலகா, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story