7 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வழக்கில் திடீர் திருப்பம்: மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
7 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மின்வேலியில் சிக்கி பலியான அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் புதைத்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்த ராஜ் மகன் மன்னார் (வயது 32) தொழிலாளி. இவர் தோட்ட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மேரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மன்னார் கடந்த 7-1-2012 அன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கந்தன் என்பவர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவருடைய மனைவி மேரி, சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர். இருந்தபோதும் அவரது கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது.
இதையடுத்து மேரி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தனது கணவர், கந்தன் என்பவர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அதன்பிறகு அவர் மாயமானார். கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிவகிரி போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் 4-9-2018-ல் ஒப்படைத்தனர்.
சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட் உத்தரவின்படி, தென்மண்டல ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் அறிவுறுத்தலின் படி, போலீஸ் துணை சூப்பிரண்டு அனில்குமார் மேற்பார்வையில் இந்த வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன், ஏட்டுகள் சிபுக்குமார், சுப்புராம், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எந்தவிதமான துப்பும் துலங்கவில்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சம்பவத்தன்று மன்னார், தண்ணீர் பாய்ச்ச கந்தன் தோட்டத்துக்கு சென்றார். அப்போது அருகில் இருந்த பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்தில் இரவு நேரத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பற்ற அனுமதியின்றி மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த மின்வேலியில் சிக்கி மன்னார் பலியானது தெரியவந்தது. மறுநாள் காலை பன்னீர்செல்வம், அவரது மனைவி பாப்பா (60), மருமகன் பாலகுரு (35) ஆகியோர் அந்த பகுதி வழியாக சென்றனர்.
அங்கு மன்னார் இறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்ததால் போலீசுக்கு பயந்த அவர்கள், மன்னாரின் உடலை அந்த தோட்டத்தில் குழி தோண்டி புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பாப்பா, அவருடைய மருமகன் பாலகுரு ஆகியோரை நேற்று தேவிபட்டினத்தில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை பாளையங்கோட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாப்பா, பாலகுரு ஆகியோரை வேன் மூலம் நெல்லை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்களை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு பாபு, அவர்கள் 2 பேரையும் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பாப்பா, பாலகுரு ஆகியோரை போலீசார் வேன் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பாலகுரு பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், பாப்பா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் அவர்களை அழைத்து சென்று மன்னார் உடலை புதைத்த இடத்தில் அடையாளம் காட்ட சொல்லி, உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக தொழிலாளி மின்வேலியில் சிக்கி பலியானதும், அவரது உடலை புதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story