ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு: சரத்பவார், அஜித்பவார் மீது வழக்குப்பதிவு; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை


ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு: சரத்பவார், அஜித்பவார் மீது வழக்குப்பதிவு; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2019 5:58 AM IST (Updated: 25 Sept 2019 5:58 AM IST)
t-max-icont-min-icon

ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சரத்பவார், அஜித்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி, 

மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த முறைகேடு காரணமாக அரசின் கருவூலத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் மும்பை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் மற்றும் 70 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அடங்குவர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அமலாக்கத்துறையினர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. விரைவில் அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சரத்பவாரும், அஜித்பவாரும் உறவினர்கள் ஆவர். சரத்பவார், காங்கிரஸ் தலைமையிலான அரசில் மத்திய மந்திரியாகவும், மராட்டிய முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story