தூத்துக்குடியில் பரபரப்பு: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
தூத்துக்குடியில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியைச் சேர்ந்த பெரியசாமி மகன் திருமணி (வயது 25). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியில் உள்ள விடுதியில் அவர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அதே விடுதியில் தங்கி படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆசிரியர் திருமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவன் தனது பெற்றோர் உதவியுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆசிரியர் திருமணியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் புகார் உண்மை என்று தெரியவந்ததால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருமணியை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். தூத்துக்குடியில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story