வாகன சோதனையில் பிடிபட்ட ஆட்டோவில் அதிகாரியை கடத்த முயன்றதால் பரபரப்பு போலீசார் விசாரணை


வாகன சோதனையில் பிடிபட்ட ஆட்டோவில் அதிகாரியை கடத்த முயன்றதால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Sept 2019 3:30 AM IST (Updated: 25 Sept 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ஆட்டோவில் அதிகாரியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் பகுதியில் அதிகாரி ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கேரள பதிவெண் உடைய ஆட்டோ ஒன்று வந்தது. மேலும் அந்த ஆட்டோவில் பயணிகளும் இருந்தனர். அந்த ஆட்டோவை வழிமறித்து அதிகாரி சோதனை செய்தார். மேலும் ஆவணங்களையும் சரிபார்த்தார். இதில், குமரியில் பயணிகளை ஏற்றி செல்ல அந்த ஆட்டோவுக்கு அனுமதி கிடையாது என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 200 மீட்டர் தொலைவில் இருந்த கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு செல்ல அவர் முடிவு செய்தார். மேலும் அதே ஆட்டோவில் ஏறிய அவர், டிரைவரை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி செல்லும்படி கூறினார். இதனால் பயந்து போன டிரைவர், ஆட்டோவை வேகமாக ஓட்டினார்.

கடத்த முயற்சி

போலீஸ் நிலையத்திலும் ஆட்டோ நிற்காமல் சென்றது. டிரைவரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அதிகாரி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். இதனை கவனித்த கொல்லங்கோடு போலீசார் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்தனர். அதே சமயத்தில் ஆட்டோ டிரைவருடன் அதிகாரியும் போராடினார்.

இனியும் தாமதித்தால் போலீசில் சிக்கி விடுவோம் என்று நினைத்த டிரைவர், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த போது அதிகாரியை கீழே இறக்கி விட்டு டிரைவர் தப்பி விட்டார். கொல்லங்கோடு போலீசார் விரட்டியும் ஆட்டோ டிரைவர் சிக்கவில்லை. மேலும் கேரள பதிவெண் உடைய ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் யார்? என கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையில் பிடிபட்ட ஆட்டோவில் அதிகாரியை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story