திருப்பரங்குன்றத்தில் அகற்றப்படாமல் ஆபத்தாக உள்ள பேனர்கள், கம்பிகள் அதிகாரிகள் அலட்சியம்


திருப்பரங்குன்றத்தில் அகற்றப்படாமல் ஆபத்தாக உள்ள பேனர்கள், கம்பிகள் அதிகாரிகள் அலட்சியம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 9:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம், திருநகர், பசுமலை பகுதிகளில் கோட்டாட்சியர் உத்தரவிட்டும் ஆபத்தான நிலையில் இருக்கும் பேனர்களும், பேனர் கம்பிகளும் அகற்றப்படாமலேயே உள்ளது.

திருப்பரங்குன்றம்,

சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தொண்டர்கள், ரசிகர்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக பிளக்ஸ் பேனர்கள், கட்–அவுட்டுகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், சாலை ஓரங்களிலும், மாடி கட்டிடங்களிலும் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், கட்–அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம், திருநகர், பசுமலை பகுதிகளில் சாலை ஓரங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் மாடி கட்டிடங்களில் பிளக்ஸ் பேனர்களுக்காக பொருத்தப்பட்ட ஆபத்தான கம்பிகள் இன்னும் அகற்றப்பட வில்லை. மழைக்காலமாக இருப்பதால் ஆபத்தான நிலையில் உள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டியது அவசியமாகும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு உடனடியாக பிளக்ஸ் பேனர்களையும், பேனர் கம்பிகளையும் அகற்றிட வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story