ராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல்: தலைமறைவான கணினி ஆபரேட்டரை கைது செய்ய பணியாளர்கள் கோரிக்கை; கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு


ராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல்: தலைமறைவான கணினி ஆபரேட்டரை கைது செய்ய பணியாளர்கள் கோரிக்கை; கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு
x
தினத்தந்தி 26 Sept 2019 5:00 AM IST (Updated: 25 Sept 2019 9:35 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் பணத்தை கையாடல் செய்து தலைமறைவாக உள்ள கணினி ஆபரேட்டரை கைது செய்து பணத்தை பெற்றுத்தரக்கோரி திருக்கோவில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் பணியாற்றி வந்த தற்காலிக கணினி ஆபரேட்டர் சிவன் அருள்குமரன் கோவிலின் வருங்கால வைப்பு நிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் கையாடல் செய்து விட்டதாக கோவிலின் இணை ஆணையர் கல்யாணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் ராமேசுவரம் கோவிலில் பலரிடம் விசாரணை செய்தனர். வருங்கால வைப்புநிதி பணத்தில் கையாடல் செய்ததில் சிவன் அருள்குமரனுக்கு உடந்தையாக இருந்ததாக கோவிலில் பணியாற்றிய ரவீந்திரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிவன்அருள் குமரன் தலைமறைவாக உள்ளார்.

இதுபற்றி ராமேசுவரம் முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முனியசாமி கூறியதாவது:-

ராமேசுவரம் கோவிலில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் பணத்தை தற்காலிக பணியாளர் சிவன்அருள் குமரன் கையாடல் செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.இது குறித்து இணை ஆணையர் புகார் கொடுத்து 3 மாதத்திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை.

எனவே இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருக்கோவில் பணியாளர்களின் பணத்தை கையாடல் செய்து தலை மறைவாக உள்ள சிவன்அருள்குமரனை உடனடியாக கைது செய்யவும்,இதோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் திருக்கோவில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தை மீட்டுதர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டையும் சந்தித்து திருக்கோவில் பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story