காரைக்கால் வானொலி நிகழ்ச்சிகளை கேட்க இணையதளம், புதிய கைபேசி செயலி அறிமுகம்; மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்


காரைக்கால் வானொலி நிகழ்ச்சிகளை கேட்க இணையதளம், புதிய கைபேசி செயலி அறிமுகம்; மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:00 PM GMT (Updated: 25 Sep 2019 4:26 PM GMT)

காரைக்கால் பண்பலை வானொலி நிலைய (100.3) நிகழ்ச்சிகளை, இனி உலகம் முழுவதிலும் இருந்து கேட்கும் வகையில் புதிய கைபேசி செயலி மற்றும் இணையதள வசதியை மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தொடங்கி வைத்தார்.

காரைக்கால்,

அகில இந்திய வானொலி நிலையத்தின் காரைக்கால் பண்பலை வானொலி நிலையம் (100.3) வெள்ளி விழா ஆண்டை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் 6 கிலோ வாட்டிலிருந்து 10 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம், காரைக்கால் வானொலி நிகழ்ச்சியை கேட்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக் கில் அதிகரித்தது.

வெள்ளிவிழா ஆண்டில் நேயர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில், செல்பேசியில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டும், இணையதள வழிகள் மூலமாகவும் காரைக்கால் பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை நேயர்கள் உலகம் முழுவதும் இருந்து கேட்கும் வசதி, காரைக்கால் வானொலி நிலையத்தில் தொடங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘வானொலி என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு இல்லாமல் பொது நலன் சார்ந்ததாக இருந்தால்தான் நீடிக்க முடியும். தற்போது, தனியார் வானொலிகள் பொழுதுபோக்குடன் பொதுநலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் காரைக்கால் வானொலி 25 ஆண்டுகளாக இவ்விரண்டையும் ஒருங்கே நடத்திவருவது பாராட்டுக்குரியது. காரைக் காலை சேர்ந்த பலர் பல நாடுகளில் உள்ளனர். காரைக்கால் நிகழ்வுகளை அவர்களும் கேட்பதற்கான வாய்ப்பாக இது அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

நிகழ்ச்சியில், நிலைய இயக்குநனர் சுவாமிநாதன், நிலைய பொறியாளர் ஜொனஸ் அம்புரோஸ், மூத்த நிகழ்ச்சி அதிகாரிகள் வெங்கடேஸ்வரன், சந்திரசேகரன், ஒலிபரப்பு அதிகாரி சதீஷ்குமார், உதவி பொறியாளர்கள் சுதாகர், மயிலானந்தன், தனராஜ், செந்தில்நாதன், பச்சையப்பன், கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story