கூடலூரில் வீடு, ரே‌‌ஷன் கடையை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்


கூடலூரில் வீடு, ரே‌‌ஷன் கடையை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 25 Sept 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வீடு, ரே‌‌ஷன் கடையை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வீடுகளை இடித்தும், விவசாய பயிர்களை மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாடந்தொரை அருகே மாங்கண்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானை ஒன்று புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது.

பின்னர் மாதவி என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் இருந்த மாதவி மற்றும் அவரது குடும்பத்தினர் பின்பக்க வாசல் வழியாக பாதுகாப்பாக வெளியேறினர். பின்னர் காட்டுயானை வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கு அறுவடை செய்து மூட்டைகளில் வைத்திருந்த நெற்கதிர்களை தின்றது.

மேலும் பாத்திரங்கள், பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது. பின்னர் விடிய விடிய அப்பகுதியில் காட்டுயானை நின்றிருந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாதவி, கூடலூர் வன அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு எனது வீட்டை காட்டுயானை இடித்து சேதப்படுத்தியது. மேலும் உணவு பொருட்களை தின்றது. இந்த நிலையில் மீண்டும் எனது வீட்டை காட்டுயானை இடித்து விட்டது. மேலும் 3 மூட்டைகளில் பாதுகாப்பாக வைத்திருந்த நெற்கதிர்களையும் தின்று விட்டது. எனவே புதிய வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுயானை தொடர்ந்து அப்பகுதிக்கு வராமல் தடுத்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்று கொண்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதேபோன்று கூடலூர் ராக்வுட் பகுதியில் மற்றொரு காட்டுயானை புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள ரே‌‌ஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்றது. தொடர்ந்து அங்கிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. மேலும் காட்டுயானை ரே‌‌ஷன் கடையை இடித்து சேதப்படுத்தியது. காட்டுயானைகளின் தொடர் அட்டகாசத்தால் கூடலூர் பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Next Story