தஞ்சையில் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு


தஞ்சையில் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:15 PM GMT (Updated: 25 Sep 2019 6:47 PM GMT)

தஞ்சையில், பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை விற்பனை செய்வதற்கும், தயாரிப்பதற்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி தஞ்சையில் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ஜோசப் சேவியர், தமிழ்செல்வன், ராமச்சந்திரன், பொன்னர், ஸ்டீபன் இளங்கோ மற்றும் அலுவலர்கள் தஞ்சை தெற்கு அலங்கம், தென்கீழ் அலங்கம், பழைய பஸ் நிலையம், கீழவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

ரூ.51 ஆயிரம் அபராதம்

அப்போது பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பொருட்களை எல்லாம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு

தஞ்சை கீழவாசல் டபீர்குளம் ரோட்டில் உள்ள பாஸ்கரனுக்கு சொந்தமான பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று சோதனை செய்தனர். அங்கு அதிகமான அளவு பிளாஸ்டிக் கவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயற்சி செய்தனர். அப்போது அங்கு இருந்த தொழிற்சாலை உரிமையாளர்கள், ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம், இவைகள் எல்லாம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் இடம் பெறவில்லை. இதனால் பறிமுதல் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், திண்பண்டங்களை அடைப்பதற்காகத்தான் இந்த கவர் பயன்படுத்தப்படுகிறது. 3 ஆண்டுகள் பிளாஸ்டிக் கவர் தயாரிக்க உரிமம் வழங்குவதற்காக பணம் கட்டி, அதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட துறையினரிடம் வாங்கி இருக்கிறோம் என்று கூறி அதற்கான ரசீதை அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால் உரிமம் இருந்தால் காட்டுங்கள் என்று கூறிய அதிகாரிகள், அந்த தொழிற்சாலையின் கதவை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் ‘சீல்’ வைத்து இருக்கிறோம். இனிமேல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தொழிற்சாலை ஊழியர்கள் கூறும்போது, எந்தெந்த பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் இணையதளத்தில் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் கவர் இடம் பெறவில்லை. ஆனால் இவையும் தடை செய்யப்பட்ட பொருள் என்கிறார்கள். ‘சீல்’ வைக்கப்பட்டு இருப்பதால் வக்கீல்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

Next Story