கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை கம்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை


கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை கம்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையால் கம்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மதியம் 1.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சூறைக்காற்றுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதேபோல் தியாகதுருகம், கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மூங்கில்துறைப்பட்டு பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான கம்பு பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 36), விவசாயி. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள அவரது வயலுக்கு மாடுகளை ஓட்டிச்சென்று மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது மதியம் 2 மணியளவில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. அந்த சமயத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு மாடு செத்தது.

Next Story