வண்ணான் ஏரிக்கு வரத்து வாய்க்கால் அமைக்க கோரி குருவாடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


வண்ணான் ஏரிக்கு வரத்து வாய்க்கால் அமைக்க கோரி குருவாடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

வண்ணான் ஏரிக்கு வரத்து வாய்க்கால் மற்றும் வடிகால்கள் அமைக்க கோரி குருவாடி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குருவாடி கிராமத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் வண்ணான் ஏரி உள்ளது. 50 ஆண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஏரியை, தற்போது அக்கிராமத்தை சேர்ந்த பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் கலெக்டரின் உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஊர் பொதுமக்கள் கரை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி கரை அமைத்துக் கொடுத்தால் மட்டும் போதாது, ஏரியை சுற்றி பட்டா விளை நிலங்கள் உள்ளன. ஏரி நிரம்பினால் அருகில் இருக்கும் விளை நிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

வரத்துவாய்க்கால்-வடிகால்

ஆகையால் இந்த ஏரிக்கு வரத்து வாய்க்கால் மற்றும் வடிகால்களை உடனடியாக அமைத்து தர வேண்டும். மேலும் கிராமத்தில் உள்ள வரத்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் வண்ணான் ஏரியில் கரை அமைக்கும் பணியை தொடர விடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வண்ணான் ஏரியை சுற்றி கரை அமைக்கப்பட்டது. ஆனால் ஏரிக்கு வரத்து வாய்க்கால் வடிகால் அமைக்கப்பட வில்லை.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையால் ஏரி நிரம்பி, வடிகால் இல்லாத காரணத்தால் ஏரியைச் சுற்றி இருந்த விளை நிலங்களில் நீர் புகுந்துள்ளது. இதனால் ஏரியை சுற்றியுள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாற்று விடப்பட்டிருந்த நிலங்களும், சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட மீன் குட்டையும் பாதிப்படைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று குருவாடி கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வண்ணான் ஏரிக்கு வரத்து வாய்க்கால், வடிகால் அமைத்து தரக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நீதிமன்றம் மூலம் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி பெற உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.


Next Story