வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவாக்கம் - மேலாண்மை இயக்குனர் தகவல்


வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவாக்கம் - மேலாண்மை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூரில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக வேலூர் மாநகராட்சி மற்றும் 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரகப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் வடிகால்வாரியம் சார்பில் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வது குறித்தும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கலந்து கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை குறைவு காரணமாக நீர் ஆதாரம் குறைந்துள்ளது. பாலாற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மேட்டூரில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

தற்போது வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட 11 பேரூராட்சிகள், 4,912 கிராமப்புற பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 4,256 கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லவும் ரூ.7,500 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இருக்கும் நிதியை வைத்து முதலில் வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த நீங்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். எந்தவொரு பகுதியும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயக்குமார், திட்ட இயக்குனர் பெரியசாமி, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ஸ்ரீதர், கண்காணிப்பு பொறியாளர் வைத்தியநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திருஞானம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story