கந்திகுப்பம் அருகே, குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பலி


கந்திகுப்பம் அருகே, குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பலி
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் பலியாகினர்.

பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் அருகே உள்ள தாண்டவன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். தொழிலாளி. இவரது மகள் சுபத்ரா (வயது 14). அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் காவியா(9). சுபத்ரா குந்தாரபள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், காவியா பெரியமட்டாரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை அவர்கள் இருவரும் அதே பகுதியில் விளையாட சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்த குட்டையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

இருவரும் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் சேற்றில் அவர்களின் கால்கள் சிக்கிக் கொண்டது. இதனால் சுபத்ரா, காவியா இருவரும் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே விளையாட சென்ற சிறுமிகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர்களது பெற்றோர் குட்டை பகுதிக்கு வந்து தேடி பார்த்தனர். அங்கு குட்டையில் சுபத்ராவும், காவியாவும் பிணமாக மிதந்ததை கண்டு கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் இறங்கி மாணவிகளின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் கந்திகுப்பத்தில் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், நேற்று 2 மாணவிகள் குட்டையில் மூழ்கி பலியாகி உள்ளனர். அடுத்தடுத்து 2 நாட்களில் குட்டையில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் கந்திகுப்பம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story