கனமழையால் வெள்ளப்பெருக்கு: அக்கரைப்பட்டி தடுப்பணை உடைந்தது
வெண்ணந்தூர் அருகே கனமழையால் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்ததையடுத்து, தற்போது அக்கரைப்பட்டி தடுப்பணையும் உடைந்துள்ளது.
வெண்ணந்தூர்,
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது அங்கிருந்து வெளியேறும் மழைநீரானது சேலம் கொண்டலாம்பட்டி வழியாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகேயுள்ள மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் கலந்து காவிரியை சென்றடைகிறது.
தற்போது சேலம் பகுதியிலிருந்து நீர் வழிந்தோடும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் அதில் ஆகாயதாமரை படர்ந்து சாக்கடை மற்றும் சாயக்கழிவுகளும் கலந்து திருமணிமுத்தாற்றில் தண்ணீர் கலந்து செல்கிறது.
இந்நிலையில் கனமழையால் மதியம்பட்டி தரைப்பாலம் உடைந்ததால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அக்கரைபட்டி தடுப்பணையும் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் பருத்திபள்ளி, கோட்டபாளையம், பாலமேடு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு விவசாய வேலைக்கு செல்பவர்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
எனவே உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. மதியம்பட்டி தரை பாலத்தினை உடனடியாக பலப் படுத்த வேண்டும் இல்லை என்றால் உடைந்து பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதைப்பற்றி அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
இதுவே இந்த பாலம் உடைப்புக்கு காரணம். பாலம் உடைந்த பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தனர். அப்போது விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் உடனடியாக உடைந்த பாலத்தை சரி செய்து கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், விவசாயிகள் தாங்களே பணம் திரட்டி தற்காலிக பாலம் அமைத்துக் கொள்ளுங்கள் என்றும், தற்போது நிதி இல்லை என்றும் கூறுகிறார்கள். தற்போது தடுப்பணையும் உடைந்துள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story