இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: கரூர் கோர்ட்டில் முகிலன் ஆஜர் திடீர் கோ‌‌ஷத்தால் பரபரப்பு


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: கரூர் கோர்ட்டில் முகிலன் ஆஜர் திடீர் கோ‌‌ஷத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

இந்திய இறையாண் மைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக கரூர் கோர்ட்டில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திடீரென கோ‌‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலரான முகிலன் (வயது 53). இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முகிலன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் கரூர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். வேனில் இருந்து முகிலன் இறங்கியதும் திடீரென கோ‌‌ஷமிட தொடங்கினார்.

பரபரப்பு

அப்போது அவர் கோ‌‌ஷமிட்ட போது, கீழடி அகழாய்வை தமிழக அரசே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், மத்திய அரசிடம் ஒப்படைக்க கூடாது. ஆந்திராவிற்கு கொடுக்கப்பட்ட சித்தூர், திருப்பதியை மீட்க வேண்டும், கர்நாடக மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட கோலார் தங்க வயல், பெங்களூருவை மீட்க வேண்டும், கேரளாவிற்கு கொடுக்கப்பட்ட இடுக்கி, பாலாறு, மூணாறை மீட்க வேண்டும் அப்போது தான் தண்ணீர் பிரச்சினை தீரும். தமிழ்நாட்டின் வாழ்வு வளரும். இதனை இந்திய அரசு மேற்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு தனிநாடாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கு தள்ளிவைப்பு

முகிலன் கோர்ட்டுக்குள் நுழைந்ததும் கோ‌‌ஷத்தை நிறுத்தினார். அவரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜய்கார்த்திக், அதனை வருகிற 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். இதைத்தொடர்ந்து முகிலனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு வேனில் அழைத்து சென்றனர்.

Next Story