கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சரத்பவார் பெயர் இல்லை: பா.ஜனதா தலைவர் ஏக்நாத் கட்சே தகவலால் பரபரப்பு
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சரத்பவார் பெயர் இடம் பெறவில்லை என பா.ஜனதா தலைவர் ஏக்நாத் கட்சே கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மும்பை,
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கருவூலத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மும்பை போலீசார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்பட ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, போலீசார் பதிவு செய்து இருந்த வழக்கை அடிப்படையாக வைத்து அஜித்பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதை தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆளும் பா.ஜனதா எடுக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதேசமயம் பா.ஜனதா இதை நியாயப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் முன்பு சரத்பவாரின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என கூறியுள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏக்நாத் கட்சே கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி (எம்.எஸ்.சி.பி.) ஊழல் வழக்கை நான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தொடர்ந்தேன். இதற்காக நான் பலமுறை குரல் எழுப்பியுள்ளேன். ஆனால் அப்போது முழு வழக்கிலும் சரத் பவாரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதை என்னால் கூற முடியும்.
இந்த வழக்கில் அவரது பெயர் எப்படி வந்தது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவர் ஆவார். பின்னர் நிதி மந்திரியாக பதவி வகித்த அவர், நில முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story