கத்தியால் கழுத்தை அறுத்து அரசு ஊழியர் படுகொலை - 15 வயது மகன் கைது


கத்தியால் கழுத்தை அறுத்து அரசு ஊழியர் படுகொலை - 15 வயது மகன் கைது
x
தினத்தந்தி 26 Sept 2019 3:53 AM IST (Updated: 26 Sept 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

காதலை கைவிடும்படி கண்டித்ததால் அரசு ஊழியரை அவரது மகன் கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிக்கமகளூரு,

ஹொலல்கெரே தாலுகாவில் காதலை கைவிட்டு விடும்படி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த 15 வயது மகன், தனது தந்தையான அரசு ஊழியரை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.

சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகா ஆர்.டி.காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பா(வயது 48). அரசு ஊழியரான இவர் ஆர்.டி.காவல் கிராம பஞ்சாயத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவருக்கு 15 வயதில் ஒரு மகன் இருந்தான். அவன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அவன், தன்னுடன் படிக்கும் சக மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவன், தனது காதலியுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததாகவும் தெரிகிறது.

இதுபற்றி அறிந்த ஜெயப்பா, தனது மகனை கண்டித்தார். மேலும் காதலை கைவிட்டு விடும்படியும், படிப்பில் கவனத்தை செலுத்தும்படியும் கூறினார். அதுமட்டுமல்லாமல் அவர், தனது மகனிடம் இருந்த செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால் ஜெயப்பாவின் மகன் ஆத்திரம் அடைந்தான். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஜெயப்பாவின் கழுத்தை, அவருடைய மகன் கத்தியால் அறுத்து படுகொலை செய்தான்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி ஹொலல்கெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், ஜெயப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து போலீசார், ஜெயப்பாவின் மகனை கைது செய்தனர்.

பின்னர் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story