இணையதளத்தில் வைரலாகும் வீடியோ: நிலவா?, குண்டும், குழியுமான மங்களூரு சாலையா?


இணையதளத்தில் வைரலாகும் வீடியோ: நிலவா?, குண்டும், குழியுமான மங்களூரு சாலையா?
x
தினத்தந்தி 25 Sep 2019 10:39 PM GMT (Updated: 25 Sep 2019 10:39 PM GMT)

இணையதளத்தில் பள்ளி மாணவி ஒருவர் விண்வெளி வீரர் போன்று உடை அணிந்து நடந்து, அவர் நடப்பது நிலவிலா? அல்லது மங்களூரு சாலையிலா? என்று சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளார்.

மங்களூரு,

மங்களூருவில் உள்ள குண்டும், குழியுமான சாலையில் ஒரு பள்ளி மாணவி விண்வெளி வீரர் போன்று உடை அணிந்து நடந்து, அவர் நடப்பது நிலவிலா? அல்லது மங்களூரு சாலையிலா? என்று சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இருப்பினும் சாலைகளை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி அட்லின் டிசில்வா குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நூதன முயற்சியில் ஈடுபட்டார்.

அதற்காக அவர் விண்வெளி வீரர் போன்று உடைகள் அணிந்து, மங்களூரு மார்க்கெட் பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையில் தட்டுத்தடுமாறி நடந்தார். அதை பார்த்தபோது அவர் நடந்தது நிலவிலா? அல்லது மங்களூரு சாலையிலா? என்ற சந்தேகத்தை தூண்டும் அளவிற்கு இருந்தது. அந்த அளவிற்கு சாலை குண்டும், குழியுமாக மோசமாக இருந்தது. இதை அட்லின் டிசில்வா தனது சக மாணவி ஒருவர் செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதைப்பார்த்த பலரும் மங்களூரு மாநகராட்சிக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டனர்.

இதுபற்றி மங்களூரு மாநகராட்சி முகநூல் பக்க குழுவை உருவாக்கியவர்களில் ஒருவரான அர்ஜூன் மாஸ்கரனாஸ் கூறுகையில், “மாணவிகள் எடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது மங்களூருவில் சாலைகள் மோசமாக உள்ளதையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் வெளிக்காட்டுகிறது. இதுவரை அதிகாரிகள் சாலைகளை சீரமைக்கவில்லை“ என்று கூறினார்.

இதேபோல் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வரும் நியா சி.கோவிந்த் என்ற சிறுவனும் விண்வெளி வீரர் போன்று உடைகள் அணிந்து மங்களூருவில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளில் நடந்து “யு-டியூப்“-ல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுபற்றி அறிந்த மங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் உனடியாக சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பாதல் நஞ்சுண்டசாமி என்பவர் விண்வெளி வீரர் போன்று உடைகள் அணிந்து குண்டும், குழியுமான சாலையில் நடந்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோவை பார்த்து ஏற்பட்ட உந்துதலில்தான் மங்களூரு மாணவிகளும் அதேபோன்று தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.


Next Story