கோவில்பட்டி, குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கோவில்பட்டி, குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி குடிநீர் வடிகால்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 12 கிராமங்களில் சுமார் 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு சீவலப்பேரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி பொது மக்கள் நேற்று காலையில் கோவில்பட்டி குடிநீர் வடிகால்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், இலுப்பையூரணி பஞ்சாயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலும் வாரம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது வாரம் ஒருமுறைகூட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இன்னும் 2 நாட்களில் சீராக குடிநீர் வழங்கவில்லையெனில், பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முற்றுகையிட்டவர்களிடம், குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் செந்தூர் பாண்டியன், உதவி பொறியாளர் மெர்சி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கயத்தாறில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால், மின்மோட்டார் மூலம் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீரேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது மின்மாற்றியில் பழுது நீக்கப்பட்டு உள்ளது. எனவே நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இலுப்பையூரணி பஞ்சாயத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story