சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது: டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது: டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Sept 2019 5:00 AM IST (Updated: 26 Sept 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.கே. சிவக்குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் டி.கே.சிவக்குமார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த 3-ந் தேதி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையினர் அவரை 13 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவரை போலீசார் திகார் சிறையில் அடைத்தனர்.

டி.கே.சிவக்குமார் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரரைணயின்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், “டி.கே.சிவக்குமார் ரூ.800 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்துள்ளார். இதில் ரூ.200 கோடி கணக்கில் வராத பண பரிமாற்றம் நடந்துள்ளது. விவசாயத்தில் வருமானம் வந்ததாக சொல்கிறார். விவசாய நிலத்தில் நெல் விளையலாம், அவர் தங்கம் விளைவிக்கிறாரா?. அவருக்கு எக்காரணம் கொண்டும் ஜாமீன் வழங்கக்கூடாது“ என்று வாதிட்டார்.

டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் சிங்வி, “டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்துவிட்டது. அவர் முறைப்படி தொழில் செய்து சொத்துகளை சேர்த்துள்ளார். தனது சொத்துகள் குறித்து தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். முறைப்படி வருமான வரியும் செலுத்தியுள்ளார். அதனால் டி.கே.சிவக் குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்“ என்று வாதிட்டார்.

கடந்த 21-ந் தேதி இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 25-ந் தேதி (நேற்று) வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். அதன்படி டெல்லி சிறப்பு கோர்ட்டு நேற்று கூடியது. மாலை 3.30 மணிக்கு நீதிபதி வந்து தீர்ப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். டி.கே.சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

டெல்லி சிறப்பு கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய டி.கே.சிவக்குமாரின் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் டி.கே.சிவக்குமாரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story