முழு அடைப்பிற்கு ஐகோர்ட்டு தடை: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் - நா.கார்த்திக் எம்.எல்.ஏ. பேட்டி


முழு அடைப்பிற்கு ஐகோர்ட்டு தடை: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் - நா.கார்த்திக் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 26 Sept 2019 3:45 AM IST (Updated: 26 Sept 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கூறினார்.

கோவை,

கோவை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், குடிநீர் வினியோக உரிமையை வெளிநாட்டு சூயஸ் நிறுவனத்துக்கு அளித்ததை வாபஸ் பெறக் கோரியும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று காலை கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிஆர்.ராமசந்திரன், காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி நிர்வாகம் வரி சீராய்வு என்ற பெயரில் பல்வேறு வரிகளை விதித்துள்ளது. குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வரி வசூல் செய்கிறார்கள். கோவையில் குடிநீர் வினியோக உரிமை சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 31.1.2011 அன்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கோவையில் 24 மணி நேர குடிநீர் வினியோகத்துக்கான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு அதுவும் 26 ஆண்டுக்கு கொடுக்க தி.மு.க. ஆட்சி காலத்தில் தீர்மானம் போடப்படவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கடைகளை மூட வலியுறுத்த மாட்டோம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம். மேலும் இந்த பிரச்சினையை கையாள்வது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை பெற்று சட்டரீதியாக எதிர் கொண்டு செயல்படுவோம்.

மக்கள் கடைகளை மூடினால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அதே வேளையில் ஐகோர்ட்டு உத்தரவு கிடைத்த பின்பு அதுகுறித்து கூட்டணி கட்சிகள், வக்கீல்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story