திண்டுக்கல் கூட்டுறவு நகரில், சாலையில் தேங்கிய மழைநீரில் காகித கப்பல் விட்டு போராட்டம்


திண்டுக்கல் கூட்டுறவு நகரில், சாலையில் தேங்கிய மழைநீரில் காகித கப்பல் விட்டு போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:15 AM IST (Updated: 26 Sept 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கூட்டுறவு நகரில் சாலையில் தேங்கிய மழைநீரில் காகித கப்பல் விட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்-கரூர் சாலையில் நேருஜிநகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாக வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதில் மினிலாரிகள், கார், இருசக்கர வாகனங்கள் திருச்சி சாலை, காந்திஜிநகர், கூட்டுறவுநகர் வழியாக கரூர் சாலைக்கு செல்கின்றன. இதனால் காந்திஜிநகர், கூட்டுறவுநகரில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தன.

இதற்கிடையே திண்டுக்கல் நகரில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கூட்டுறவுநகரில் உள்ள அனைத்து சாலைகளும் முற்றிலும் உருக்குலைந்து விட்டன. மழைநீரால் அரிப்பு ஏற்பட்டு முழங்கால் அளவுக்கு, சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி விட்டன. தற்போது அந்த பள்ளங்களில் மழைநீர், குளம் போல் தேங்கி நிற்கிறது.

மேலும் சில இடங்களில் சேறும், சகதியுமாக மாறியதால் இருசக்கர வாகனங்ளில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. இதனால் கூட்டுறவுநகர் பொதுமக்கள் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் அனைவரும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில், மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன், மாநில துணை செயலாளர் போஸ் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று அங்கு வந்தனர்.

பின்னர் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில், காகிதத்தில் செய்த கப்பல்களை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டன கோஷம் எழுப்பியதோடு, சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story