கபிஸ்தலம் அருகே கோவில் குளத்தில் இருந்த முதலை பிடிபட்டது கிராம மக்கள் நிம்மதி


கபிஸ்தலம் அருகே கோவில் குளத்தில் இருந்த முதலை பிடிபட்டது கிராம மக்கள் நிம்மதி
x
தினத்தந்தி 26 Sep 2019 11:00 PM GMT (Updated: 26 Sep 2019 7:01 PM GMT)

கபிஸ்தலம் அருகே கோவில் குளத்தில் இருந்த முதலை பிடிபட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருவைகாவூர் கிராமத்தில் வில்வவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான எம தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் தீர்த்தவாரி நடைபெறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் குளத்தில் தூய்மை பணிகள் நடைபெறும்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் பரவலாக பெய்த மழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வந்த தண்ணீர் மூலமாக எம தீர்த்தக்குளம் நிரம்பி காணப்பட்டது. இதனால் குளத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.

முதலை நடமாட்டம்

கிராம மக்கள் தினசரி பயன்படுத்தும் கோவில் குளத்தில் முதலை ஒன்று நடமாடுவதை சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவனித்து கிராம மக்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து குளம் முன்பாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, குளத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

குளத்தில் முதலை நடமாடியது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், தாசில்தார் கண்ணன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சுவாமிநாதன், அறிவானந்தம், வனத்துறை அலுவலர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் நேற்று குளத்தில் இருந்த முதலையை பிடிக்கும் பணி நடைபெற்றது.

4 அடி நீளம்

இந்த பணியில் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் பிச்சை மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதையொட்டி மோட்டார்கள் மூலம் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தண்ணீர் குறைந்த நிலையில் வன அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் முதலையை வலை மூலம் பிடித்து குளத்தில் இருந்து வெளியேற்றினர். அந்த முதலை 4 அடி நீளம் இருந்தது. கடந்த சில நாட்களாக கோவில் குளத்தில் அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story