பணிகளை பார்வையிட என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அழைப்பு: எழிலகம் ஹூமாயூன் மகால் ரூ.34 கோடியில் சீரமைப்பு


பணிகளை பார்வையிட என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அழைப்பு:  எழிலகம் ஹூமாயூன் மகால் ரூ.34 கோடியில் சீரமைப்பு
x
தினத்தந்தி 27 Sept 2019 4:00 AM IST (Updated: 27 Sept 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள ‘ஹூமாயூன்’ மகால் ரூ.34.8 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தை வருகிற 2020-ம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், ‘இந்தோ சராசெனிக்’ கட்டிடக்கலை நுட்பத்தில் 1768-ம் ஆண்டு ‘ஹூமாயூன் மகால்’ என்றழைக்கப்படும் ‘சேப்பாக் அரண்மனை’யை, பிரபல கட்டிட கலைஞரான ஆங்கில பொறியாளர் ‘பால் பென்பீல்டு’ என்பவர் வடிவமைத்து, கட்ட தொடங்கினார். 1770-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட இந்த கட்டிடமானது 1855-ம் ஆண்டு வரை ஆற்காடு நவாப்பின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் இருந்துள்ளது.

19 மற்றும் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் இஸ்லாமிய வடிவமைப்புடன் ஆங்கில கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாமலும், பயன்படுத்தப்படாமலும் இருந்ததால், முழுவதும் பாழடைந்தது. இதன் காரணமாக நீண்ட காலமாக கட்டிடம் மூடப்பட்டு கிடந்தது. இந்த சூழ்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு கட்டிடத்தை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டதன் பேரில், பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் கே.பி.சத்யமூர்த்தி கூறியதாவது:-

2 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஹூமாயூன் மகாலின் ஒரு பகுதி கடந்த 2007-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து 2010-ம் ஆண்டு கட்டிடத்தின் மற்றொரு பகுதியும் இடிந்தது. பின்னர் 2013-ம் ஆண்டு கட்டிடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு அமைத்து கட்டிடத்தை பராமரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், தற்போது பழமை மாறாமல் கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு ரூ.34.8 கோடி நிதி ஒதுக்கி சீரமைக்க உத்தரவிட்டு உள்ளது.

அதனடிப்படையில் மகால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய 81 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் 8 அரங்குகளும், முதல் தளத்தில் 6 அரங்குகளும் உள்ளது. இதில் 108 கதவுகள் உள்ளன. ஜன்னல்கள் எதுவும் கிடையாது. இங்குள்ள ‘தர்பார் ஹால்’ ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகாரிகளுக்கான கூட்ட அரங்காகவும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பழமை மாறாமல் சீரமைப்பதற்காக சிமெண்டை பயன்படுத்தாமல் சுண்ணாம்பு கலவை மூலம் ஹூமாயூன் மகால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் இருந்து மணல், நெல்லை மாவட்டம் கழுகுமலையில் இருந்து சுண்ணாம்பு, ராஜபாளையத்தில் இருந்து பழமை வாய்ந்த கல் மற்றும் கடுக்காய் போன்றவை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணிகளை நிறைவு செய்து, 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டிடத்தை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளோம்.

இதற்கிடையே, சீரமைப்புக்கு பின்னர் இந்த கட்டிடம் இழந்த மகிமையை திரும்ப பெறுவதுடன், 100 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்.

மேலும், தற்போது கட்டிட பொறியியல் படிக்கும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் இந்த பழமை வாய்ந்த கட்டிடம் சீரமைப்பதை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். கிடைக்கும் வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story