விராலிமலை அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் சாவு


விராலிமலை அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 27 Sept 2019 4:45 AM IST (Updated: 27 Sept 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே குளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் இறந்தனர். இவர்கள் அனைவரும் மாணவர்கள் ஆவார்கள்.

விராலிமலை,

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜீவன்ராஜ். இவரது மனைவி தங்கம். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த ஆவூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்து பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஜட்சன் ஆபிரகாம் (வயது 12), ஜான்சன் (9) ஆகிய இரண்டு மகன்கள். இவர்கள் இருவரும், ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 மற்றும் 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் நேற்று மதியம் ஜட்சன் ஆபிரகாம், ஜான்சன் மற்றும் ஆவூரை சேர்ந்த சபரி மகனான அதே ஊரில் 7-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (12) ஆகிய 3 பேரும் ஆவூரில் உள்ள சின்ன குளத்திற்கு குளிக்க சென்றனர்.

3 மாணவர்கள் சாவு

இந்நிலையில், ஆவூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தது. 3 மாணவர்களும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர். இதில் ஜான்சன் இறந்து தண்ணீர் மேலே மிதந்துள்ளான். அவ்வழியே வந்த ஒரு பெண் இதை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அருகில் வயலில் வேலை செய்தவர்களிடம் தெரிவித்தார். மேலும் தகவல் தெரிந்து அங்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கதறி துடித்தனர். உடனே அங்கு வந்த இளைஞர்கள் சிலர், குளத்தில் குதித்து தண்ணீரில் பிணமாக மிதந்த ஜான்சன் மற்றும் குளத்திற்குள் சிக்கியிருந்த ஜட்சன் ஆபிரகாம், சந்தோஷ் ஆகியோரை வெளியே மீட்டு வந்தனர்.

இதில் ஜட்சன் ஆபிரகாமும், தண்ணீருக்குள்ளேயே இறந்து விட்டது தெரியவந்தது. சந்தோஷூக்கு மட்டும் உயிர் இருந்ததால் ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்து ஆவூருக்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், விராலிமலை தாசில்தார் சதீஷ் சரவணகுமார், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்தினர். பின்னர் ஜட்சன் ஆபிரகாம், ஜான்சன் ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவூரில் பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி இறந்தது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story