கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கல்லால் தாக்கப்பட்ட பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கல்லால் தாக்கப்பட்ட பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Sept 2019 4:15 AM IST (Updated: 27 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கல்லால் தாக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வடக்கு நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்தன் (வயது 55), தொழிலாளி. இவருடைய மனைவி இந்திராணி (50). கூலிவேலைக்கு சென்று வந்தார்.

இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. இதில் பிரபாகரன் என்பவர் மட்டும் குடும்பத்துடன் தந்தையுடன் வசித்து வந்தார். இந்திராணி வேலைக்கு சென்ற இடத்தில், அவருடன் வேலைக்கு வந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சித்தன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி இரவு சித்தன், இந்திராணி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் தூங்க சென்று விட்டனர். மனைவி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய சித்தன் முடிவு செய்தார்.

பின்னர் நள்ளிரவு சித்தன், இந்திராணியின் தலையில் கல்லால் தாக்கினார். இதனால் அவர் சத்தம் போட்டார். இந்த அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் பயத்தில் எழுந்தனர். அப்போது இந்திராணி படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை பார்த்து பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து பிரபாகரன் உடனடியாக இந்திராணியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20-ந் தேதி புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சித்தனை கைது செய்தனர்.

இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இந்திராணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையறிந்த பரமத்திவேலூர் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story