பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்,
கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நோக்கி கொப்பரை தேங்காய் பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை ராமாபுரத்தை சேர்ந்த அருண் (வயது 26) ஓட்டினார். அவருடன் ராமபுரத்தை சேர்ந்த முருகன் (25) என்பவர் கிளனராக இருந்தார்.
இந்த லாரி ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதை வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள முதல் கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்ப முடியாமல் லாரி நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருண், முருகன் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.
லாரி கவிழ்ந்ததில், அதில் இருந்த கொப்பரை தேங்காய் ரோட்டில் சிதறியது. இதன்காரணமாக ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் பர்கூர் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அந்தியூரில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு நேற்று மதியம் 12.30 மணி அளவில் அந்த லாரி மீட்கப்பட்டதுடன், அதில் இருந்த கொப்பரை தேங்காயும் மற்றொரு லாரிக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பர்கூர் மலைப்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது. பர்கூர் மலைப்பாதையில் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பஸ்சில் வந்த பயணிகள் மிகவும் அவதிப்படுத்தினர்.
Related Tags :
Next Story