கொடுமுடி அருகே பரபரப்பு அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்


கொடுமுடி அருகே பரபரப்பு அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 27 Sept 2019 3:45 AM IST (Updated: 27 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கொடுமுடி, 

கொடுமுடி அருகே உள்ள எழுநூற்றிமங்கலம் ராராம்பாளையம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் சைக்கிளில் அந்தப்பகுதியில் நேற்று காலை சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக கனரக லாரி ஒன்று வந்தது. இதில் அந்த லாரிக்கு வழிவிடுவதற்காக முதியவர் சைக்கிளை சாலையோரத்தில் திருப்பினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துவிட்டார். ஆனால் அந்த லாரி அங்கு நிற்காமல் சென்றுவிட்டது.

முதியவர் கீழே விழுந்தது குறித்து தகவல் அறிந்ததும், அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதியவரை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் ராராம்பாளையம் பகுதி வழியாக அதிகபாரம் ஏற்றி வந்த 10 லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொடுமுடி தாசில்தார் சிவசங்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ரத்தினசாமி, உதவிப் பொறியாளர் கணேசமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும், லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ராராம்பாளையத்தில் உள்ள சாலை வழியாக கனரக லாரிகள், தண்ணீர் மற்றும் சிமெண்டு கலவைகளை ஏற்றி அதிவேகமாக செல்கிறது. இதனால் சாலைகள் பழுதடைந்து விட்டது. குறிப்பாக எங்களால் சாலையோரங்களில் நடந்து செல்ல சிரமப்படுவதோடு, பெரிதும் அச்சப்படுகிறோம். இதேபோல் அடிக்கடி விபத்துகளும் நடந்து உள்ளன. இதனால் ராராம்பாளையம் சாலை வழியாக அதிகபாரம் ஏற்றிய கனரக லாரிகளை அனுமதிக்கூடாது என்று கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறிப்பாக இன்று (நேற்று) காலை முதியவர் ஒருவர் சாலையில் சென்றபோது, கனரக லாரிக்கு வழிவிடும் போது கீழே விழுந்துவிட்டார். அதனால் ராராம்பாளையம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் கூறுகையில், ராராம்பாளையம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்தப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படுவதோடு, அகலப்படுத்தவும் ஆவன செய்யப்படும் என்றனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிறைபிடித்த கனரக வாகனங்களை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தநிலையில் அதிகபாரம் ஏற்றி வந்த 10 கனரக லாரிகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story